குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளை எப்படி கண்டுபிடிப்பது?
- கவிதா சேகர், காரைக்குடி.
1) வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது.
2) கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது.
3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.
4) கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.
5) கண் கட்டி அடிக்கடி வருவது.
6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப்பார்க்க வேண்டும்.
மாறுகண்ணை சரி செய்ய முடியுமா? எனது சித்தி பெண்ணுக்கு மாறுகண் உள்ளது? அவள் வயது 22.
- அ.வேதவல்லி, பெங்களூரு.
கண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை நோக்கி இருந்தால் அது மாறுகண்(Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்றுவிட்டுவிடுகிறார்கள். இவை தவறான கருத்துக்களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதைத் தக்கசமயத்தில் சரி செய்யாவிட்டால் அந்தக் கண் பார்வையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதிற்குள் இந்தப் பிரச்னையை சரி செய்யவேண்டும்.. வயதாகியும் சிலர் மாறுகண்ணோடு நன்றாக இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள்பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவனிப்பதே நல்லது.
கண்களில் பூ விழுவது என்றால் என்ன?
- லில்லி, அம்பத்தூர்.
கண்களில் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இது வந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம்காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்கலாம்.
கண்களுக்கு வைட்டமின் `ஏ‘ சிறந்தது என்கிறார்கள். எந்தெந்த உணவுகளில் வைட்டமின் `ஏ‘ அதிகமாக உள்ளது?
- காயத்ரி கோபாலகிருஷ்ணன், டால்மியாபுரம்.
முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக்கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் வைட்டமின் `ஏ‘ போதிய அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கேரட், பால், வெண்ணெய்,முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து உள்ளது.
மூக்குக் கண்ணாடியை எப்படி செலக்ட் செய்ய வேண்டும்?
சங்கர், போரூர்.
கண்ணாடி பிரேம்கள் வலுவுடையவையாகவும், லென்சுகளை எல்லாப் பக்கங்களிலும் நன்றாகப் பிடித்திருப்பவையாகவும், மூக்கில் படியும்பகுதிபிரேமுடன் நன்கு பொருந்தியவையாகவும் இருக்க வேண்டும். காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், மூக்குக் கண்ணாடியும் ஒன்றுவைத்திருப்பது நல்லது.
கண்களைப் பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம்?
- லதா, மந்தைவெளி.
இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும், முகத்தையும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன்படுத்திய துணி ஆகியவற்றைக் கொண்டுநம்முடைய கண்களைத் துடைக்கவே கூடாது.
கண்நோய் அல்லது கண் வலி, தூசு, பிசிறு போன்றவை இருந்தால் பச்சிலைச்சாறு, தாய்ப்பால் அல்லது மற்றவர் சொல்லும் கண்ட கண்டமருந்துகள் போன்றவற்றைக் கண்களில் போடவே கூடாது. இவை அனைத்தும் கண்களைக் கெடுத்துவிடும். காலதாமதம் செய்யாமல் கண்மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
Dr சித்தார்த்தன்
No comments:
Post a Comment