ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்துவது கூடாது.
இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் மறுக்கவில்லை. கடந்த காலங்களில் வாழ்ந்த இமாம்களும் மறுத்துள்ளனர்.
இமாம் ஷாஃபி அவர்களின் கூற்று
ஒரு ஹதீஸ் நம்பத்தகுந்ததாக ஆகுவதற்குரிய நிபந்தனைகள் முழுமையாக இருந்தால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது கட்டாயமாகுமா? இமாம் ஷாஃபி அவர்கள் கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள்.
اநூல் : அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438
இமாம் மாலிக் மற்றும் குர்துபீ அவர்களின் வழிமுறை
குர்துபீ கூறுகிறார் : மாலிக் அவர்கள் கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையானக் கருத்திற்கு முரண்படுகிறது என்று கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையானக் கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தை கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நூல் : பத்ஹுல்பாரீ பாகம் : 4 பக்கம் : 70
இமாம் குர்துபீ அவர்களின் கூற்று
ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்துவது கூடாது.
நூல் : தஃப்சீருல் குர்துபீ பாகம் : 12 பக்கம் : 213
இமாம் இப்னு தய்மியா அவர்களின் வழிமுறை
படைப்பின் துவக்கம் சனிக்கிழûயில் இருந்து அதன் இறுதி வெள்ளிக்கிழமையாக இருந்தால் திட்டமாக இவ்வுலகம் ஏழுநாட்களில் படைக்கப்பட்டதாகிவிடும். இக்கருத்து குர்ஆன் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமானதாகும். ஹதீஸ் கலையில் நுன்னறிவுள்ளவர்கள் இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸில் உள்ள குறையை நிறுபித்துள்ளார்கள்.
(என்று, முஸ்லிம் 4997 இல் வரக்கூடிய ஹதீஸை, குரானுக்கு முரண் என்று கூறி மறுக்கிறார்)
நூல் : மஜ்மூஉ ஃபதாவா இப்னி தய்மியா பாகம் : 4 பக்கம் : 34
இமாம் ஜுர்ஜானி அவர்களின் கூற்று
ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.
நூல் : அத்தஃரீஃபாத் பாகம் : 1 பக்கம் : 113
இமாம் சுயூத்தி அவர்களின் கூற்று
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்துகொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்த செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூல்நிலைக்கும் ஒத்துவராத செய்தியும் இந்தவகையில் அடங்கும்.
நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276
இமாம் இப்னுல் கய்யிம் அவர்களின் கூற்று
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்துகொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவானக் கருத்திற்கு முரண்படுவதாகும்.
நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80
இமாம் அபூபக்கர் சர்ஹஸீ அவர்களின் கூற்று
ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படாது. செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது.
நூல் : உசூலுஸ்ஸர்ஹசீ பாகம் : 1 பக்கம் : 364
இந்த விதி பின்வரும் புத்தகங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதை (நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத ஹதீஸ் என்பதை அறிவதற்கு) நான்கு முறைகள் இருக்கிறது. முதலாவது அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்படும் செய்தியாகும்.
நூல் : கஷ்ஃபுல் அஸ்ரார் பாகம் : 4 பக்கம் : 492
(செய்தியின் கருத்தை வைத்து நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத செய்தி என்ற) முதல்வகையை நான்கு முறைகளில் (அறியலாம் அதில்). ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்பாடாக அமைவதாகும்.
நூல் : ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ் பாகம் : 2 பக்கம் : 368
இமாம் இப்னு ஜவ்ஸீ அவர்களின் கூற்று
சிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவுசெய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸை கண்டால் அது இட்டுக்கட்டப்பட்டச் செய்தி என்று புரிந்துகொள் என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார் !
நூல் : தர்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 277
எதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல் சிர்த்து அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக்கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி.
நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 275
அர்ரபீஉ பின் ஹய்ஸம் அவர்களின் கூற்று
சில ஹதீஸ்கள் இருக்கின்றன. பகன் ஒளியைப் போல் அதற்கும் ஒளி உண்டு. அதன் மூலமே (அது சரியானது என்பதை) அறிந்துகொள்ளலாம். இன்னும் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இரவின் இருளைப் போல் அதற்கும் இருள் உண்டு. அதன் மூலமே (அது தவறானது என்பதை) அறிந்துகொள்ளலாம்.
நூல் : மஃரிஃபத்துல் உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 62
முஹம்மத் பின் அபீபக்கர் அஸ்ஸரயீ அவர்களின் கூற்று
இட்டுக்கட்டப்பட்ட செய்தி குர்ஆனுடைய தெளிவானக் கருத்திற்கு முரண்படுவது பற்றிய பகுதி. ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவானக் கருத்திற்கு முரண்படுவது அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.
நூல் : நக்துல் மன்கூல் பாகம் : 2 பக்கம் : 218
No comments:
Post a Comment