தன்நிலை தடுமாறா ஜமாத்
இஸ்லாத்திற்கு புறம்பான அனாச்சாரங்கள் மலிந்து கிடந்த தமிழகத்தில் இஸ்லாத்தின் தூய கொள்கையை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து துவங்கிவிட்டது தவ்ஹீதுக்கு எதிரான பிரச்சாரங்கள். கிட்டத்தட்ட80களில் ஆரம்பிக்கப்பட்ட தவ்ஹீது பிரச்சாரம், இன்றைக்கு இறைவனின் மாபெரும் கிருபையால் மக்கள் மத்தியிலே பெருமளவிற்கு சென்று சேர்ந்துள்ளதை அறியலாம். அதேநேரம் அன்றைக்கு தவ்ஹீது பிரச்சாரத்திற்கு எந்த அளவிற்கு எதிர்ப்புகள் இருந்ததோ அதைவிட பன்மடங்கு எதிர்ப்பை இன்றைக்கு தவ்ஹீதும் அதன் கொள்கையில் இருப்பவர்களும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகிறார்கள். நன்மையை ஏவுகின்றனர், தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர்.அவர்களே நல்லோர்.
(திருக்குர்ஆன் 3:114)
மேற்கண்ட இறைவசனத்தை அடிப்படையாகக் கொண்டு துவக்கப்பட்ட தவ்ஹீது பிரச்சாரம் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு நிலையை அடைந்தது, தவ்ஹீது பிரச்சாரத்தை பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் ஒரு கட்டத்தை அடைந்ததும், நாம் இப்போது நன்றாக வளர்ந்து விட்டோம், எனவே நம் கொள்கையில் கொஞ்சமாக அனுசரித்துச் செல்லலாமே என்றும், அல்லது இனிமேல் நீங்கள் எங்களுடன் இருந்தால் எங்களின் வளர்ச்சி பாதிக்கும் என்றும் சொன்னவர்களையெல்லாம் புறம் தள்ளி அவர்களை விட்டு விலகி இறைவனின் நாட்டத்தால் இன்றைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற ஒரு தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருக்கிறது.
நன்மையை ஏவி தீமையைத் தடுங்கள் என்ற இறைவனின் வார்த்தைகளை அன்று முதல் இன்றுவரை மெய்ப்பித்து தீமைகளுக்கெதிராக பிரச்சாரம் செய்வதால் உலக அளவிலே கடும் எதிர்ப்புக் களத்தைக் கண்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் . என்ன எதிர்ப்பு வந்தாலும் அன்றைக்கு என்ன கொள்கையோ அதிலே எள் அளவும், எள் முனையளவும் மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது அரசியல் நிலையாகட்டும் பொருளியல் நிலையாகட்டும்.வெளிநாட்டு அரசிடமிருந்தோ, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தோ எவ்விதமான உதவியும் பெருவதில்லை என்ற உயரிய கொள்கையை அன்று முதல் இன்றுவரை கட்டிக் காத்து வரும் ஒரே இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மட்டும் தான். ஜமாத்தை பயன்படுத்தி ஹஜ் வியாபாரம் செய்பவர்களும் இந்த ஜமாத்தில் இல்லை, அல்லது மக்கள் கூட்டத்தைக் காட்டி எங்களுக்கு இரண்டு எம்.பி சீட் அல்லது 4 எம்.எல்.ஏ சீட் தாருங்கள் என எந்த அரசியல் கட்சிக்கும் கோரிக்கை வைப்பர்களும் இந்த ஜமாத்தில் இல்லை.
தவறு செய்தவர் தலைமைப் பொருப்பில் இருந்தாலும் எந்த விளைவையும் யோசிக்காமல் அவரை தூக்கி தூர வீசுவதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போல இன்னொரு எந்த அமைப்பையுமோ அல்லது கட்சியையுமோ உதாரணம் காட்ட முடியாது. இந்த ஜமாத்தைப் பற்றி அவதூறு சொல்வதையும் எழுதுவதையும் தங்களின் முழு நேரப்பணியாக கொண்டுள்ளவர்களின் பிரச்சாரங்கள் வெளித்தோற்றத்தில் ஜமாத்திற்கு எதிரான விளைவை ஏற்படுத்துவதைப் போலத் தெரிந்தாலும் அதையெல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அது தவ்ஹீது பிரச்சாரத்திற்கும் தவ்ஹீது ஜமாத்திற்கும் வெற்றியாக ஆக்கி அருளுகிறான்.
சமீபத்தில் கூட திருவிடைச்சேரி துப்பாக்கிச்சூடு விசயத்தை எப்படியாவது ததஜ மேல் சுமத்திவிட வேண்டும் என இந்த ஜமாத்திற்கு எதிராக இருக்கும் எல்லா அமைப்பினரும் ஒரு குடையின் கீழ் அமர்ந்தார்கள். அந்த ஒரு குடையின் கீழ்
அமர்ந்த அனைவரும் ஒரே ஒரு கொள்கையின் கீழ் ஒன்றுபட்டார்கள். அது தவ்ஹீது எதிர்ப்பு கொள்கை. இதைத்தவிர வேறு எந்த கொள்கையிலும் அவர்களால் ஒன்றிணைய முடியாது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை எப்படியாவது ததஜ தலையில் போட்டு இந்த அமைப்பை அழித்துவிட வேண்டும் என்ற அவர்களின் கனவு எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கருனையால் தகர்க்கப்பட்டு நிறைவேறாமல் போய்விட்டது. ஆனாலும் அவர்கள் விடுவதாய் இல்லை. இதை நினைக்கும் போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு ஓடையின் கீழ்ப்பகுதியில் ஒரு ஆடு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கே மேற்புறமாக வந்த ஒரு ஓநாய் அந்த ஆட்டைக் கடித்து சாப்பிட எண்ணி அதனோடு வம்பிழுக்க ஆரம்பித்தது. ஏன்டா! நான் குடிக்கும் தண்ணீரை எச்சில் செய்கிறாய் எனக் கேட்டதாம் ஓநாய். உடனே பயந்து போன ஆடு, எசமான்! உங்களுக்கு மேல் புறத்தில் நின்று நான் தண்ணீர் குடித்தால் தானே அது உங்களுக்கு எச்சிலாக ஆகும்.நீங்கள் மேலே நிற்கிறீர்கள், நானோ கீழே நிற்கிறேன். பின்னர் எப்படி எச்சில் பண்ண முடியும்? என சொன்னதாம். உடனே உசாரான ஓநாய் இன்றைக்கு சரி! நேற்றைக்கு நீ எனக்கு மேலே நின்று தண்ணீர் குடித்திருக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம்? எனக் கேட்டு அதை அடித்ததாம். இந்த கதையின் நிலை தான் இவர்களின் நிலையும்.
இவர்களுடைய இது போன்ற செயலுக்காக ஏக இறையவன் அன்றைக்கே ஒரு வசனத்தை இறக்கிக் காட்டியிருக்கிறான்.
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
(திருக்குர்ஆன் 5:2)
காலங்காலமாக ஒன்றுபட்ட சமுதாயத்தை இவர்கள் வந்து பிரித்து கூறுபோட்டு விட்டார்கள் என இன்று வரை போர் முரசு கொட்டும் எனதருமைச் சமுதாயச் சொந்தங்களே! ஒற்றுமை ஒற்றுமை என திருக்குரானுக்கும், உத்தம தூதரின் வழிமுறைக்கும் எதிரான அனைத்தையும் கயிறாக திரித்து அந்த கயிற்றை பற்றிப் பிடியுங்கள் என அழைப்பு விடுத்தால், அந்த கயிற்றைப் பற்றி பிடிக்க என்றைக்குமே ததஜ ஒத்துழைக்காது. காரணம் இந்த அமைப்பின் கொள்கைகள் அன்றைக்கு எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில் தான் இன்றைக்கும் இருக்கிறது, இறைவன் நாடினால் என்றைக்கும் இருக்கும். என்றைக்கு இந்த கொள்கைகளுக்கு பங்கம் விளைகிறதோ அன்றைக்கே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள் தவ்ஹீதை தன் உயிர் மூச்சாய்க் கொண்டவர்கள்.
மற்ற இயக்கங்களில், தலைவர் சொன்னா சொன்னது தான், அதைச் செய்தே தீருவோம். அதைப்பற்றியெல்லாம் ஏன் எதற்கு என கேள்வி கேட்க மாட்டோம். அதன் நல்லது கெட்டதுகளை சிந்திக்கவே மாட்டோம் என்ற கொள்கைகளைக் கொண்ட தொண்டர்களைப் போல என்றைக்குமே ததஜவின் கொள்கை சகோதர்கள் இருந்ததே இல்லை. தலைமை ஒரு கட்டளையிட்டால் அதை உடனடியாக தலைமையிலோ அல்லது மாவட்ட நிர்வாகங்களிலோ தொடர்பு கொண்டு காரணங்களை அறிந்து கொண்டு அதில் திருப்தி ஏற்பட்ட பின்னர் தான் களத்திலேயே இறங்குவார்கள். உதாரணமாக தற்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையை வரவேற்ற வைகோவை கண்டித்து சுவரொட்டி ஒட்டுங்கள் என தலைமையில் இருந்து செய்தி வந்ததும், உடனடியாக யாரும் சுவரொட்டி அடிக்க போய்விடவில்லை. என்ன காரணம்? ஏன் வைகோவை எதிர்க்கிறீர்கள் என மாநில/மாவட்ட நிர்வாகங்களைத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திய பின்னர் தான் சுவரொட்டி அடிக்கும் விசயத்தை முடிவு செய்தார்கள்.இவர்கள்தான் ததஜவின் கொள்கை சகோதர்கள். தலைவர் கட்டளையிட்டால் அதை ஓடிச்சென்று உடனடியாக நிறைவேற்றுபவர்கள் இங்கே கிடையாது. கொள்கை சகோதரர்கள் அனைவருமே சிந்திக்கும் மக்களாக இறையச்சமுடையவர்களாகத் தான் இதிலே இருக்கிறார்கள்.
இரவெல்லாம் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்து, இவர்களுக்கெதிராக நாளைக்கு என்ன செய்யலாம்,இணைய தளத்தில் என்ன எழுதலாம் என யோசித்து யோசித்து அடுத்த நாள் உறுப்படியாக ஏதாவது ஒரு வேலையைச் செய்யாமல் ஜமாத்திற்கு எதிராக அவதூறு செய்திகளை எழுதுவதும், குறுந்தகவல் அனுப்புவதுமே முழு நேர பணியாகக் கொண்டு சிலர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ததஜ என்றால் தனிநபர் தற்காப்பு ஜமாத் என்றும், தமிழ்நாடு தறுதலை ஜமாத் என்றும் அவர்களையே உள்ளோட்டமாக நினைத்து இவ்வாறு விளக்கம் தருகிறார்கள். தன்னைப்போல பிறரை நினை என்ற பழமொழிக்கு உதாரணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு, அவர்கள் இனிமேலும் சிரமப்பட்டு ததஜவிற்கு விரிவாக்கம் தேடவேண்டாம் என்பதற்காக நாம் தரும் துல்லியமான் விளக்கம், ததஜ என்றால் அது என்றைக்குமே "தன்னிலை தடுமாறா ஜமாத்" என்பதை புரிந்து கொண்டு இனியாவது தங்களின் சக்திகளை ஆக்கப்பூர்வமான காரியங்களுக்குச் செலவிடுவார்கள் என நம்புவோம்.
R.நிஜாம்கான்
கோட்டைப்பட்டினம்
No comments:
Post a Comment