Thursday, November 11, 2010

பெருநாள் தொழுகை

பிஸ்மில்லாஹ்

பெருநாள் தொழுகை

திடலில் பெருநாள் தொழுகை: இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும். 'மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்' (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்களது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1472

பெருநாள் தொழுகையில் பெண்கள்: பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வரவேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும். (ஆதாரம்: புகாரீ 351, முஸ்லிம் 1475)

ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்: பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரீ 986

தொழுகைக்கு முன் சாப்பிடுதல்: நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: இப்னுகுஸைமா 1426

முன் பின் சுன்னத்துகள் இல்லை: நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும்,பின்னும் எதையும் தொழவில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1476

பாங்கு இகாமத் இல்லை: இரு பெருநாள் தொழுகைகளையும் பாங்கும், இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல; இரு தடவை அல்ல; பல தடவை நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன். அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி) நூல்: முஸ்லிம் 1470

தொழும் முறை: பெருநாள் தொழுகையை இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். தக்பீர் தஹ்ரீமாவுக்குப் பின்னர், முதல் ரக்அத்தில்அல்லாஹும்ம பாயித் பைனீ... அல்லது வஜ்ஜஹத்து வஜ்ஹிய லில்லதீ... என்ற துஆவை ஓதி விட்டு, அல்லாஹு அக்பர் என்று ஏழு தடவை இமாம் கூற வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் ஏழு தடவை சப்தமின்றிக் கூற வேண்டும். பின்னர் ஸூரத்துல் ஃபாத்திஹா மற்றும்துணை சூராக்கள் ஓதி ருகூவு, ஸஜ்தா மற்றும் மற்ற தொழுகையில் செய்யும் அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.

பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி இரண்டாம் ரக்அத்திற்கு எழுந்தவுடன் ஸூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதற்கு முன்னர் இமாம் ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் சப்தமின்றி ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். பின்னர் மற்றத் தொழுகைகளைப் போல் ஸூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி, ருகூவு, ஸஜ்தா போன்ற அனைத்துக் காரியங்களையும் செய்து தொழுகையை முடிக்க வேண்டும். கூடுதல் தக்பீர் கூறும் போது தக்பீர்களுக்கு இடையில் ஓதுவதற்கு எந்த துஆவையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. எனவே கூடுதல் தக்பீர்களுக்கிடையில் எந்த துஆவும் ஓதக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். இவற்றை கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 971, தாரகுத்னீ பாகம்: 2, பக்: 48, பைஹகீ5968

மிம்பர் இல்லை: வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரீ 956, முஸ்லிம் 1472 அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265, அஹ்மத் 10651)

இரண்டு குத்பாக்கள் இல்லை: நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரேயொரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்கு) வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில் நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: இப்னுமாஜா 1278

தக்பீரும் பிரார்த்தனையும்: இரு பெருநாள்களிலும், ஆண்களும் பெண்களும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது. (ஆதாரம்: புகாரீ 971, முஸ்லிம் 1474)

அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர் ஆகும்: பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில் கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில் தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! அல்குர்ஆன் 7:205

ஜுமுஆ அன்று பெருநாள்: வெள்ளிக்கிழமையன்று பெருநாள் வந்து விட்டால் விரும்பியவர் பெருநாள் தொழுகையை மட்டும் தொழுதுவிட்டு ஜுமுஆத் தொழுகையை தொழாமல் இருக்கலாம். விரும்பியவர் இரண்டு தொழுகைகளையும் நிறைவேற்றலாம்.

'இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்து உள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜுமுஆ தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜுமுஆ தொழுகையை நடத்துவோம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத் 907

நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, பெருநாளை அல்லாஹ் அனுமதிக்கின்ற வழியில் கொண்டாடி, வல்ல அல்லாஹ்வின் வல்லமையைப் போற்றி வாழ்வோம். Courtesy: தொழுகைச் சட்டங்கள் (MI சுலைமான்)

No comments:

Post a Comment