ஊழல்: சோமாலியா முதலிடம்… இந்தியா 87 வது இடம்!!
பெர்லின்: ஊழல் மற்றும் முறைகேடுகளில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது ஆப்பிரிக்க நாடான சோமாலியா. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இடம் 87!
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இயங்கும் ஊழல் கண்காணிப்பு நிறுவனம் உலக அளவில் ஊழலில் முன்னணி வகிக்கும் நாடுகள் பட்டியலை ஆண்டு தோறும் வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது. 2010-ம் ஆண்டுக்கான அந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
உலக நாடுகளில் உள்ள அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் இருந்தும், ஊழல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்கு அவர்களிடம் இருந்து பதில்களை பெற்றது இந்த நிறுவனம்.
எந்தெந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம் தரவேண்டியிருக்கிறது, தனியார் நிறுவனங்களில் பெறப்படும் லஞ்சம், அரசு ஊழியர்களின் முறைகேடுகள் போன்றவற்றின் அடிப்படையில் ஊழல் நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதன்படி சோமாலியா நாடுதான் ஊழலில் முதலிடத்தில் உள்ளது. இங்கு அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் வன்முறை செயல்கள், கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுவதாகவும், இவற்றுக்கு அரசு அதிகாரிகளே பெருமளவு துணை போவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஊழலும் முரைகேடுகளும்தான் அந்த நாட்டை வறுமையில் பிடியில் நிரந்தரமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஊழல் நாடுகள் பட்டியலில் ஜப்பான் 17வது இடத்திலும், இங்கிலாந்து 20-வது இடத்திலும், அமெரிக்கா 22-வது இடத்திலும், பாகிஸ்தான் 143-வது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்தான் பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில், ஊழலில் புதிய இலக்கணமே படைத்துள்ள இந்தியா 87 வது இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 84வது இடத்திலிருந்தது. அதாவது ஊழலில் 3 புள்ளிகள் முன்னேற்றமடைந்துள்ளது!
அதே நேரத்தில் ஊழல் குறைந்த நாடுகள் வரிசையில் டென்மார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், பின்லாந்து, சுவீடன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லார்ந்து, நார்வே, போன்ற நாடுகள் உள்ளன.
ஊழல் குறைந்த டாப் 10 நாடுகள் பட்டியலில் 10-க்கு 9.3 புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன டெனமமார்க், நியூஸிலாந்து மற்றும் சிங்கப்பூர்.
9.2 புள்ளிகளுடன் நான்காவது மற்றும் 5 வது இடத்தை வகிக்கின்றன பின்லாந்தும் ஸ்வீடனும்.
கனடா 8.9 புள்ளிகளுடன் 6 வது இடத்திலும், நெதர்லாந்து 8.8 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், ஸ்விட்ஸர்லாந்து 8.7 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், நார்வே 8.6 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளன.
புள்ளிக் கணக்கில் சோமாலியா பெற்றுள்ளது 1.1 புள்ளி மட்டுமே.
2.4 புள்ளிகள் பெற்று 134வது இடம் பெற்றுள்ள பிலிப்பைன்ஸ்தான் ஆசியாவில் அதிக ஊழல் மலிந்த நாடு. ஆனால் கடந்த ஆண்டுக்கு இந்த ஆண்டு எவ்வளவோ பரவாயில்லையாம். 2009-ல் 139வது இடத்திலிருந்தது. 5 புள்ளிகள் முன்னேற்றம் கண்டுள்ளது!
ஆசிய கண்டத்தில் மிகவும் ஊழல் மலிந்த நாடுகளாக பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், சாலமன் தீவுகள், மங்கோலியா, வியட்நாம், கம்போடியா, யேமன், ஈரான், தைமோர் – லெஸ்டே, சிரியா, மாலத்தீவுகள், லாவோஸ், பாபுவா நியுகினியா, லெபனான் ஆகிய நாடுகள் அதிக ஊழல் மலிந்தவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் அதிக ஊழல் மிக்க நாடுகள் என்ற ‘பெருமை’ முன்னாள் சோவியத் யூனியன நாடுகளுக்கே கிடைத்துள்ளது. அவை: மால்டோவா, கொசோவா, கஜக்ஸ்தான், பெலாரஸ், அஜர்பைஜான், உக்ரைன், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான்!
மற்ற கண்டங்களில் ஊழல் நாடுகளின் வரிசை:
ஆப்ரிக்கா:
அல்ஜீரியா, செனகல், பெனின், கபான், எதியோப்பியா, மாலி, மொசாம்பிக், தான்சானியா, எரித்ரியா, மடகாஸ்கர், நைஜீரியா, சியர்ரா லியோன், டோகோ, ஜிம்பாப்வே, மொரிடானியா, காமரூன், கோட் டி ஐவரி, மத்திய ஆப்ரிக்க குடியரசு, கொமோரோஸ், காங்கோ- பிராஸாவில்லே, கினியா – பிஸோ, காங்கோ, கினியா
தென்னமெரிக்கா:
அர்ஜைன்டைனா, பொலிவியா, கயானா, ஈக்வடார், நிகாரகுவா, ஹோண்டுராஸ், ஹைதி, பராகுவே, வெனிசூலா.
குறிப்பு:
பட்டியலில் கடைசி இடம் பிடித்த நாடு ஊழலில் நம்பர் ஒன் என்றும், பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு ஊழலில் கடைசி இடம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு சோமாலியாவுக்கு கடைசி இடம், அதாவது 178வது இடம் கிடைத்துள்ளது. அதனால் மிக மிக மோசமான ஊழல் மலிந்த நாடுகளில் முதலிடம். டென்மார்க்குக்கு பட்டியலில் முதலிடம் கிடைத்துள்ளது. அதாவது ஊழலில் கடைசி இடம் என்று அர்த்தம். இப்படி தலைகீழாகக் குறிப்பிடக் காரணம், வெளிப்படைத் தன்மை, ஊழல் நடக்கும் சூழல், விகிதம், வாய்ப்புகள் போன்ற பல criteria-க்களின் அடிப்படையில் 10-க்கு இத்தனை புள்ளிகள் என்று ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிடப்படுகிறது.
அந்த அடிப்படையில் சோமாலியாவுக்கு 1.1 புள்ளிதான் கிடைத்துள்ளது. டென்மார்க்குக்கு அதிகபட்சமாக 9.3 புள்ளிகள் கிடைத்துள்ளன.
No comments:
Post a Comment